ஹவாயின் கிலாவியா எரிமலைக்குள் விழவிருந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்பு
எரிமலை வாய்க்குள் விழவிருந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் ஹவாயி தீவில் நிகழ்ந்தது.இதனையடுத்து, சுற்றுலாப்பயணிகளுக்கு ஹவாயி தேசியப் பூங்கா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிறிஸ்துமஸ் நாளன்று தன் குடும்பத்தினருடன் அங்குச் சென்றிருந்த அச்சிறுவன், நேராக கிலவேயா எரிமலையின் 400 அடி உயரத்திலிலுள்ள முகட்டை நோக்கி ஓடியதாகக் கூறப்படுகிறது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனுடைய தாயார், சத்தமிட்டவாறே விரைந்தோடி, அவனைப் பாதுகாப்பாக மீட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.எரிமலை வாய்ப்பகுதியை எட்ட ஒரே ஒரு அடியே இருந்தபோது அவன் மீட்கப்பட்டான்.
சம்பவத்தை நேரில் கண்ட பூங்காக் காப்பாளார் ஜெசிகா பெரகேன், அதுகுறித்துப் பகிர்ந்துகொள்வதன்மூலம் எதிர்கால விபத்துகளைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஹவாயி பெரிய தீவில் அமைந்துள்ள கிலவேயா எரிமலை உலகில் மிகுந்த செயல்பாட்டுடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று.
அது அவ்வப்போது வெடிப்பதுண்டு. கடைசியாக டிசம்பர் 23ஆம் திகதி வெடித்தபோது, எரிமலைக் குழம்பு பெருகி வழிந்தோடியதைப் படங்கள் காட்டின.
எரிமலைக் குழம்பைக் காண்பதற்காக பூங்காவின் மூடிய பகுதிக்குள் குடும்பங்கள் திரண்டிருந்தபோது அச்சிறுவன் எதிர்பாராவிதமாக, அந்த எரிமலையின் பெரிய வாய்ப்பகுதியை நோக்கி ஓடியதாகச் சொல்லப்பட்டது.
அதனுள் அவன் தவறி விழுந்திருந்தால் உயிர்பிழைத்திருக்க முடியாது என்று ஜெசிகா கூறினார்.