சிங்கப்பூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சிங்கப்பூர் மக்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர் கடந்த ஓராண்டில் குறைந்தது ஒரு முறை போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர் என மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளை உட்கொண்டோரில் சுமார் ஐந்தில் ஒருவர், ஆர்வமே அதற்கு முக்கியக் காரணம் என்று கூறினர். மற்றவர்கள் தங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள அது உதவக்கூடும் என்று நம்பினர்.
10 சதவீதத்திற்கு சற்றுக் கூடுதலானோர் நண்பர்களின் தூண்டுதலால் போதைப்பொருளை உட்கொண்டனர். கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் முதலில் உட்கொண்ட போதைப்பொருள் கஞ்சா என்று தெரிவித்தனர்.
அதனையடுத்து அதிகமானோர் உட்கொண்டது எக்ஸ்டசி என தெரியவந்துள்ளது. சிறிய எண்ணிக்கையிலானோர் மெத்தம்ஃபெட்டமீன், போதைமிகு அபினை உட்கொண்டனர்.
பெரும்பாலோர் போதைப்பொருளைத் தீங்குமிக்கதாக இன்னும் கருதுகின்றனர். குறிப்பாக மதுப்புழக்கம் அல்லது புகைபிடித்தலுடன் ஒப்பிடும்போது அதன் தீமை அதிகம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஓராண்டில் போதைப்பொருளை உட்கொண்டவர்களில் ஐந்தில் இருவருக்கு முதன்முறை அதை உட்கொண்டபோது வயது 18க்கும் குறைவு. சராசரி வயது சுமார் 16 ஆகும். சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் தெரிவித்தார்.
அதுவும் வீட்டில் இளையர்களுக்குப் பெற்றோரின் வழிகாட்டுதல் இருக்கவேண்டிய இடத்தில் அது தொடங்குவதை அவர் சுட்டினார். பிரச்சினையைச் சரிசெய்ய மேலும் முயற்சி தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையர்களுக்குப் போதைப்புழக்கத்தின் தீமைகளை எடுத்துரைக்கவும் அது பற்றிய தவறான தகவல்களை எதிர்கொள்ளவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மூத்த அமைச்சர் தியோ தெரிவித்தார்.