சிறுவர் தொடர்பில் இணையத்தில் தேடிய பிரித்தானிய இளைஞர்- வெளிவந்த வரும் பகீர் பின்னணி
சிறார்களை கவர்வது எவ்வாறு என இணையத்தில் தேடிய இளைஞர் ஒருவர், துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, தற்போது பல ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை, பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவு என்றே நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. 28 வயதான ஜெஷான் தாரிக் கடந்த ஆண்டு ஜூலை 7ம் திகதி பீற்றர்பரோ பகுதியில் வைத்து தமது முதல் இரையான 10 வயது சிறுமியை நெருங்கியுள்ளார்.
சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் சுமார் 3.30 மணியளவில் குறித்த சிறுமி தமது தாயாரின் பணியிடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய தாரிக், தமது வாகனத்தில் ஏறும்படி முதலில் கெஞ்சியவர், பின்னர் மிரட்டியுள்ளார்.இதில் பயந்து போன சிறுமி அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார். ஆனால் சிறுமியை துரத்தி சென்ற தாரிக், வழிபோக்கர் சிலரிடம் சிறுமி அழுதுகொண்டே உதவி கேட்பதை அறிந்து, அங்கிருந்து தப்பியுள்ளார்.
ஆனால், இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரத்திற்கு பின்னர் 12 வயது சிறுமியை அனுகிய தாரிக், பத்திரமாக வீடு சேர்ப்பதாக நம்ப வைத்து தமது காரில் ஏற வைத்து, குளிர் பானத்தில் மருந்து கலந்து, அந்த காரில் வைத்தே சிறுமியை சீரழித்துள்ளார்.
ஒருவழியாக தாரிக்கின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். இந்த இரு விவகாரங்கள் தொடர்பில் கைதான தாரிக் மீது சிறார்களை கடத்தியது, துஸ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
அவரது மொபைலில், சிறார்களை கவர்வது எவ்வாறு என இணையத்தில் தேடிய தரவுகளும் ஆதாரமாக சிக்கியது. தற்போது அவர் மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் 8 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கேம்பிரிட்ஜ் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.