கனடாவில் எடுக்கப்பட்ட தீர்மானம் – மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை
கனடாவில் மத்திய லிபரல் அரசாங்கமும் ஜனநாயக கட்சியும் மருந்துக் காப்பீட்டில் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க உதவிய நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தத்தின் கீழ் இரு கட்சிகளும் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்துள்ளது.
இதன் அடிப்படையில், மருத்துவ அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு கனேடிய பிரஜையும் நீரிழிவு மற்றும் கருத்தடை சிகிச்சையை இனி இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
குறித்த தகவலை வெள்ளிக்கிழமை புதிய ஜனநாயக கட்சி உறுதி செய்துள்ளது. தேசிய மருத்துவத் திட்டத்தின் முதல் பாகத்தில் புதிய இந்த திட்டமானது சேர்க்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரத்தில் சட்டமாக்கப்படும் என்றே கூறப்படுகிறது. மார்ச் 1ம் திகதிக்குள் தாம் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்க மறுத்தால், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், சில இறுதி விவரங்கள் வார இறுதியில் இறுதி செய்யப்படலாம் என்றும் NDP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக Type 1-2 நீரிழிவுக்கான ஊசி வழங்கப்பட உள்ளது.
அத்துடன், கூடுதல் நீரிழிவு மருந்துகளும் சர்க்கரை அளவை கண்காணிக்கும் கருவிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட உள்ளது.
ஆனால் நீரிழிவுக்கான புதிய மருந்தாக அறியப்படும் Ozempic இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.
மட்டுமின்றி, கருத்தடை சிகிச்சைகளும் இனி இலவசம் என்றே கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் தனியார் காப்பீட்டு வசதி இல்லாத 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்கப்படுகிறது.