நடிகை திரிஷா குறித்து தவறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை தவறாக பேசி வருவது கண்டிக்கதக்கது எனவும் திரிஷாவை தவறாக பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும் எனவும் தொடர்ந்து எல்.முருகன் நீலகிரியில் கட்சியின் கட்டளைக்கு ஏற்றவாறு கட்சி பணியாற்றுவார் என்றும் நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்த அவர், கட்சி என்ன கட்டளையிட்டாலும் முருகன் பணியாற்றுவார் எனவும் கூறினார்.
மேலும் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை கடந்த ஆறுமாதமாக சிலர் தவறாக பேசி வருவதாகவும் இது கண்டிக்கதக்கது எனவும் திரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பேசிய எல்.முருகன், எனக்கு பதவி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்தியபிரதேச நண்பர்களுக்கும் நன்றி என்றார்.தமிழகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி மாநிலங்களைவைக்கு வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மோடி அவர்கள் இந்த பதவி வழங்கியிருக்கிறார் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நிதியால் இன்று தமிழகம் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.