தென்கொரியாவில் ராஜினாமா செய்த 1,600 வைத்தியர்கள் : உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதியுறும் நோயாளிகள்
தென்கொரியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வைத்தியர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது.
எனவே வைத்தியர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்டும் என அரசாங்கம் அறிவித்தது.
அரசின் இந்த அறிவிப்பால் வைத்தியர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான வைத்தியர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
முக்கியமாக அதிகளவில் வைத்தியர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600-க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏராளமான ஆபரேசன்கள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.





