பிரித்தானிய சரக்குக் கப்பல் மூழ்கடிப்பு – செங்கடலில் பரபரப்பு
பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பெலிஸ் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலை ஹவுதி போராளிகள் தாக்கி அழித்துள்ளனர்.
செங்கடலில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் வெடித்துப் பெரும் தேசமடைந்து மூழ்கும் நிலையில் கைவிடப்பட்டதை இங்கிலாந்து கடல்சார் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ரூபிமார் ஏடன் வளைகுடாவில் இருந்ததாகவும், பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதிகளால் இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு வழங்கிய நாடுளின் கப்பல் மீது ஹவுதி போராளிகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா, பிரித்தானியாவும் யேமன் நாட்டில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனினும் ஹவுதி போராளிகளை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை.
தொடர்ச்சியாக இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் மேற்கு ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.