விருதுநகர்-10 பேரின் உயிரைப் பறித்த பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்துள்ள பொலிஸார் மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில், 55 அறைகளில் 150 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் 5 அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்து 5 பெண் தொழிலாளர்கள், 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் பணிகளில் ஈடுபட்டதே, இந்த விபத்திற்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பட்டாசு சாலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது. வெடிப்பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் போர்மேன் சுரேஷ்குமாரை மட்டும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் இதுவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.