காலராவால் பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா – 3.5 டன் எலையிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா
காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா நாட்டிற்கு, இந்தியா சார்பில் 3.5 டன் எடையிலான நிவாரண உதவிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் கடந்த சில மாதங்களாக காலரா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்காததும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததாலும், காலரா நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு பொதுமக்கள் தற்போது சுத்திகரிக்கப்படாத அசுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக காலரா நோய் தொற்று ஜாம்பியா மட்டும் இன்றி அதன் அண்டை நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை அடுத்து ஜாம்பியா நாட்டில் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கால்பந்து மைதானம் ஒன்றை தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றி அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை. அந்த வகையில் நாட்டில் உள்ள 90% மக்கள் தற்போது வரையிலும் அசுத்தமான குடிநீரையே பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியா சார்பில் ஜாம்பியா நாட்டிற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் காலரா நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசரகால ஓ.ஆர்.எஸ் மருந்துகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுமார் 3.5 டன் இடையிலான நிவாரண பொருட்கள் ஜாம்பியாவிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் சிக்கி உள்ள ஜாம்பியா நாட்டுடன் இந்தியா துணை நிற்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.