ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி கத்தியால் வெட்டி கொலை – இளைஞர் கைது செய்த பொலிஸார்
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை செய்த இளைஞரை செட்டிபாளையம் பொலிஸார் கைது செய்தனர்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் தங்குவதற்கான விடுதியும் அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (25), நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே விடுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுதன் தண்டி (25), இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அறைக்கு வந்த ராகேஷ்குமார், அங்கிருந்த சுதன் தண்டி அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சுதன் தண்டி அங்கிருந்த கத்தியை எடுத்து ராஜேஷ் குமாரை வெட்டினார். இதில் கை மற்றும் கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வந்து ராகேஷ் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராகேஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் பொலிஸார் அங்கிருந்து தப்பி தலைமறைவான சுதன் தண்டியை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.