200 அடி கோபுரம் மற்றும் டிரான்ஸ்மிட்டர் திருட்டு!! பிரபல வானொலி நிலையம் மூடல்
அலபாமாவில் உள்ள வானொலி நிலையத்திலிருந்து 200 அடி ரேடியோ டவர் மற்றும் டிரான்ஸ்மிட்டரை திருடர்கள் திருடிச் சென்றனர். இதனால், ஏஎம் நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் பிப்ரவரி 2 ஆம் திகதி அலபாமாவின் ஜாஸ்பரில் நடந்தது. இந்த வானொலி ஜாஸ்பர் சமூகத்திற்கான செய்தி மற்றும் தகவல்களின் ஆதாரமாக இருந்தது.
வானொலி நிலையத்தின் பொது மேலாளர் பிரட் எல்மோர், AP செய்தி நிறுவனத்திடம், நிலையம் திருடப்பட்டபோது சமூகம் ஒரு குரலை இழந்ததாகக் கூறினார்.
பிப்ரவரி 2ம் திகதி ஊழியர்கள் ஸ்டேஷனுக்கு வந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. கோபுரம் மற்றும் அருகிலுள்ள கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து ஒளிபரப்பு சாதனங்களும் திருடப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த கோபுரம் 1950 களில் இருந்து உள்ளது. திருடர்கள் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கோபுரத்தை உடைத்து சிறிய துண்டுகளாக எடுத்து சென்றிருக்கலாம் என வானொலி நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கோபுரமோ உபகரணமோ காப்பீடு செய்யப்படவில்லை, புனரமைப்புக்கு $60,000 முதல் $100,000 வரை (சுமார் ரூ. 83 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.