நேரலையில் வாந்தி எடுத்த தொகுப்பாளர்.. பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சி!
பிரபல ஆங்கில செய்தி சேனலான CNN சேனலின் நேரலையின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பிரபல ஆங்கில செய்தி ஊடகமான CNN சேனல், 33 ஆண்டுகளாக ‘தி சிட்டியேஷன் ரூம்’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக உல்ஃப் பிளிட்சர் என்பவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிலையில், 75 வயதான பிளிட்சர், கடந்த வியாழனன்று நடந்த ‘தி சிட்டியேஷன் ரூம்’ நிகழ்ச்சி நேரலையின் போது திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு, நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த வியாழனன்று டொனால்டு டிரம்ப்பால் கொலோராடாவில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பேச ராஸ்கின் அவர்களை ‘தி சிட்டியேஷன் ரூம்’ நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியை பிளிட்சர் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். அப்போது, நிகழ்ச்சி முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், பிளிட்சரின் கேமராவை கட் செய்தனர்.
காரணம், பிளிட்சர் அவர்களின் உடல்நிலை மிக மோசமாக மாறி, நேரலையின் போதே பிளிட்சர் வாந்தி எடுத்துவிட்டார். நீண்ட நேரமாக வாந்தியை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவரால் கடைசி நிமிடங்களில் கட்டுப்படுத்த இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. அதனால், நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் வேறொரு தொகுப்பாளருடன் நிகழ்ச்சி தொடங்கியது.
நேரலையின்போது வாந்தியை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பிளிட்சரின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவ ஆரம்பித்தவுடன், அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியதோடு, அவர் உடல்நலம் சீராகி மீண்டு வரவேண்டும் என்று அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை டேக் செய்து பதிவிட்டு வந்தனர்.
தன் உடல் நிலை குறித்து தன் ரசிகர்களும், நலம் விரும்பிகளும் கேட்டதையடுத்து, அவர்களின் கவலையை புரிந்துக் கொண்ட பிளிட்சர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் “நான் நலமாக இருக்கிறேன்! என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள். நான் உங்களை மீண்டும் ‘தி சிட்டியேஷன் ரூம்’ -இல் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.