செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடிய ஓசூர் தம்பதியினர்!
ஓசூர் அருகே ஒரு தம்பதியர் தங்கள் செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே விருந்து வைத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் அதிகமனோரால் பிரியமாக வளர்க்கப்படும், செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு முதல் இடம் உண்டு. அதற்குக் காரணம், மனிதர்களிடம் நாய்கள் காட்டும் அன்பும், பாசமும் தான். பல நேரங்களில் செல்லமாய் வளர்க்கும் நாய்கள் சொந்த பந்தத்துக்கு ஈடாக மாற்றிவிடுகிறது.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சிலர் தங்கள் வீட்டின் ஒரு அங்கமாகவே பிள்ளைகளைப் போலவே பாசம் காட்டி வளர்ப்பார்கள். சிலரது பாசம் இந்த செல்லப்பிராணிகளிடம் அளவு கடந்ததாக ஆகிவிடும். அப்படியான சிலர் செல்ல நாய்களுக்குச் சொத்தை எழுதி வைத்த விநோதம்கூட நடந்ததுண்டு.
நாய்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, அவை இறந்தால் சமாதி கட்டி நினைவுநாள் கொண்டாடுவது என்றெல்லாம் பலர் செல்லப்பிராணிகள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அப்படித்தான் ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் செல்லமாய் வளர்க்கும் நாய்க்குட்டி கர்ப்பமானதை அறிந்து அதற்கு வளைகாப்பு நடத்தி அசத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – ராதா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
அந்த நாய்க்குட்டி கர்ப்பமானதை அறிந்த அவர்கள், அதற்கு வளைகாப்பு விழா நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி இன்று தங்கள் வளர்ப்பு நாய்க்கு வளையல், புத்தாடை, பூ, பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டுப் பாடி வளைகாப்பு நடத்தினர். இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பித்த கிராமத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்தும் அசத்தி இருக்கிறார்கள் இந்தப் பாசக்காரத் தம்பதியர்.