ஹாங்காங்கில் விமானம் மோதி விமான நிலைய பணியாளர் மரணம்..!
உலகம் முழுவதும் விமானங்களால் ஏற்படும் விபத்துகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அவ்வப்போது விமான தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேபோல் விமான நிலையங்களிலும் விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்காக ஏராளமான பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹாங்காங் விமான நிலையத்தில் விமான நிலைய பணியாளர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை விமானங்கள் பார்க் செய்யப்படும் பகுதியில் பணியாளர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஜோர்டான் நாட்டை சேர்ந்த 34 வயதான பணியாளர் ஒருவர் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.
உயிரிழந்த பணியாளரை உடலை மீட்ட விமான நிலைய பாதுகாப்பு படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விமானங்களை ஓடுதளத்திற்கு எடுத்துச் செல்லும் டோ வாகனத்தில் அமர்ந்திருந்த அந்த நபர், சீட் பெல்ட் அணியாததால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பின்னால் வந்த விமானம் ஏறி இறங்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த டோ வாகனத்தை ஓட்டி வந்த 60 வயதான ஓட்டுநரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள விமான நிலைய பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.