சனத் நிஷாந்தவின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள்
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெற்றது.
கண்டி கலகெதர மறவனகொட குடும்ப மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாவலராக கடமையாற்றிய 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்வு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் 15 இலட்சம் ரூபா பண நட்டஈட்டையும் வழங்கியுள்ளார்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளன.
கடந்த போராட்டத்தின் போது அரச அமைச்சரின் வீடு எரிந்து நாசமானதையடுத்து அவரது உடல் அந்த காணியில் கட்டப்பட்ட தற்காலிக கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி பெருந்தொகையான மக்கள் இன்று காலை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் காரை ஓட்டிச் சென்ற சாரதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த சாரதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ராகம போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.