காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பீரங்கி குண்டு தாக்குதலில் 19 பேர் பலி!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்23 (மார்ச் 23) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
எம்23 கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருவதாக காங்கோ குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ருவாண்டா எல்லையில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். அம்மாகாணத்தின் எம்விசொ நகர் மீது பீரங்கி குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு கிவு மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.