தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிஜ சிங்கம், புலி… பாகிஸ்தான் கட்சிகள் மத்தியில் தடுமாற்றம்
பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் சின்னத்துக்கான தடுமாற்றமும், போராட்டமும் எழுந்துள்ளது.
பொதுத்தேர்தல் நெருங்குவதை அடுத்து பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மும்முரம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் – இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட்டு சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ள போதும், அவரது கட்சியினர் தேர்தல் களத்தில் தீயாக பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே தேர்தலுக்காக நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தல் பிரச்சாரக் களத்தில் முன்னிலை வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் நவாஸ் கட்சியின் சார்பாக செயல்படுவதாக இம்ரான் கட்சியினர் குறைபட்டு வருகின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட விரும்பிய இம்ரான்கானின் 2 தொகுதிகளுக்கான மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
தேர்தல் பிரச்சார களத்தில் சின்னங்களை முன்வைத்து அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கடும் மோதல் எழுந்துள்ளது. இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சின்னமான கிரிக்கெட் பேட், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தல் நடத்தாததை குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் தேர்தல்களில் கட்சியின் சின்னத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டு மக்களில் சுமார் 40 சதவீதத்தினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பதால், கட்சியின் சின்னத்தை முன்னிறுத்தியே வாக்குகள் முடிவாகின்றன. வாக்குச்சாவடிகளில் குவியும் வாக்காளர்கள் சின்னம் பார்த்தே முத்திரை குத்துகிறார்கள். இந்த சூழலில் தேர்தல் சின்னத்தை இழந்ததில் இம்ரான் கட்சியினர் சோர்ந்து போயுள்ளனர்.
மாறாக அதே போன்று உட்கட்சி தேர்தல் நடத்தாத நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு, கட்சி சின்னமான புலிக்கு தடை விதிக்கப்படாததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உற்சாக மிகுதியில் கட்சியின் தொண்டர்கள் நடத்திய காரியத்தால் நேற்று லாகூரில் பதற்றம் ஏற்பட்டது. கட்சியின் சின்னமான புலியை, நிஜமாலுமே கூண்டில் அடைத்து லாகூர் பிரச்சாரக் கூட்டத்திலும், அதையொட்டிய பேரணியிலும் தொண்டர்கள் ஒருவர் அழைத்துச் சென்றார். புலி மட்டுமன்றி உடன் சிங்கத்தையும் கூண்டில் அடைத்து வந்தனர். இதனை கடைசி நேரத்தில் கவனித்த நவாஸ் ஷெரீப், உடனடியாக காட்டுவிலங்குகளை உரிய இடங்களில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.