தெலிஜ்ஜவில துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கு நாளை இறுதிக் கிரியை
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் கடையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 வயதுடைய இளைஞனின் சடலம் அவரது சகோதரரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
21 வயதுடைய மின்திக அலுத்கமகே என்ற இளைஞன், கடையின் உரிமையாளர் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இக்கடையின் உரிமையாளர் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் 21 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னதாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி தன்னை காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாக கடையின் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
மனுவைத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு பல தடவைகள் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை பண்டாத்தர அணையின் காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட போதிலும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சடலத்தின் இறுதிக் கிரியைகள் நாளை மாலை 4 மணிக்கு அக்குரஸ்ஸ அமலகொட பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.