சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பதவி விலகல் – 27 குற்றச்சாட்டுகள்
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து எஸ். ஈஸ்வரன் விலகுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்வரன் நேற்று முன்தினம் பிரதமர் லீக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு (2023) ஜூலை மாதம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அவர் மீது விசாரணை நடத்தத் தொடங்கியதிலிருந்து தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளப் பணத்தை திரும்ப கொடுக்கப்போவதாகத் ஈஸ்வரன் கூறியதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பொறுப்பில் பெறப்பட்ட சம்பளமும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறப்பட்ட ஊக்கத்தொகையும் அதில் அடங்கும்.
இப்போது ஈஸ்வரன் தம்முடைய பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதால் இனி அவருக்கு அரசாங்கத்திடமிருந்து சம்பளமோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படமாட்டாது.
ஈஸ்வரனின் பதவி விலகும் முடிவையும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் முடிவையும் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமர் லீ அவருக்குப் பதிலளித்தார்.
இந்த வழக்கைச் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் அரசாங்கம் சரியாகக் கையாண்டுள்ளதாக லீ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
2022 செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் ஈஸ்வரன் செல்வந்தர் ஓங் பெங் செங்கிடமிருந்து (Ong Beng Seng) 166,200 வெள்ளிக்கும் அதிகம் பெறுமானமுள்ள வெகுமதிகளைப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.