நைஜீரியாவில் விபத்துக்குள்ளான படகு … 8 பேர் மரணம்; 100 பேர் மாயம்!
நைஜீரியா நாட்டில் நடந்த படகு விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள போர்கு மாவட்டத்தின் அருகில் உள்ள கெப்பி பகுதிக்குச் சென்ற படகு ஆற்றின் நடுவே மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவல் அறிந்ததும் தேசிய மீட்பு படைகள் அங்கே முகாமிட்டு மீட்பு பணியின் இறங்கியுள்ளன.
இது குறித்துப் பேசிய மாநில அவசர உதவி மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அடூ, “படகில் அதிகளவில் எடை இருந்ததால், காற்று பலமாக தாக்கியபோது படகு மூழ்கியுள்ளது. விபத்துக்குள்ளான படகின் கொள்ளளவு என்பது 100 பயணிகளை மட்டுமே. ஆனால், அதனை விட அதிகமான பயணிகள் படகில் இருந்தது. மேலும், பயணிகளின் உடைமைகள் மற்றும் தானிய மூட்டைகளும் இருந்தன. இதுவே விபத்துக்கான முக்கிய காரணம்” என்றார்.
முதற்கட்டமாக இந்த படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணாமல் போன சுமார் 100 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. நைஜீரிய நாட்டில் சாலை போக்குவரத்து சரியாக இல்லாததால் அதிக மக்கள் படகில் செல்ல வேண்டிய சூழலால் படகுகள் விபத்து அடிக்கடி நடைபெறுவதாக தெரிகிறது.
நைஜீரிய நாட்டில் இதுவரை நிகழ்ந்த படகு விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும் கடந்த 7 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகுகள் மூழ்கியுள்ளன. தொடர் படகு விபத்துக்களை தடுக்க நைஜீரிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், படகு போக்குவரத்தை முறையாக கண்காணிக்கவும் வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.