ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கிலான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜப்பான் ராணுவம் உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிவருகிறது.
இந்த நிலையில் நேற்று மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி ஐந்து நாட்களுக்கும் மேலாக அந்த மூதாட்டி உயிருடன் இருந்தது மீட்புபடையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே கொட்டும் பனியில் சிக்கியவர்கள் 72 மணி நேரத்திற்குப் பிறகு உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், 124 மணி நேரத்திற்குப் பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.