ஐபோனில் உள்ள அம்சம் இனி ஆண்ட்ராய்டிலும்! பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
என்னதான் இப்போது ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டாலும், அது விரைவாக காலியாகி விடுகிறது என பலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம்.
புதிய ஸ்மார்ட்போன்களில் சில மாதங்கள் வரை மட்டுமே அதன் பேட்டரி சிறப்பாக இருக்கும். ஆனால் போகப் போக பேட்டரியின் ஆற்றல் குறைந்து சார்ஜ் விரைவில் காலி ஆகிவிடும்.
அதே நேரம் ஆண்ட்ராய்டு போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் ஆண்ட்ராய்டு சாதனங்கள் பிரபலமாக உள்ளது.
அதே நேரம் விலை அதிகமாக இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் தரம் வாய்ந்தவை என்பதால் உலக அளவில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் ஐபோன்களில் இருக்கும் சிறந்த பேட்டரி அம்சம் ஒன்று இனி ஆண்ட்ராய்டிலும் கிடைக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
விரைவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் பேட்டரி இண்டிகேட்டர் என்ற புதிய அம்சம் வரும் என ஆண்ட்ராய்டு ஆத்தாரிட்டி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது வரும் எல்லா ஸ்மார்ட் ஃபோன்களிலும் லித்தியம் அயன் பேட்டரி தான் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் நடக்கும் ரசாயன மாற்றம் காரணமாக காலப்போக்கில் அவற்றின் திறன் குறைந்துவிடுகிறது. இதை Battery Degradation என்பார்கள்.
பேட்டரியின் திறன் குறைவதை நாம் தவிர்க்க முடியாது என்றாலும், அதன் தன்மையை நாம் குறைக்க முடியும். அந்த வகையில்தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பேட்டரியின் ஆற்றல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரியப்படுத்துகிறது.
இந்த அம்சமானது விரைவில் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக ஆண்ட்ராய்டு பயனர்களும் தங்கள் ஸ்மார்ட்போனின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும். இதில் கூகுள் நிறுவனம் சற்று கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்கள் பேட்டரியில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது மற்றும் சார்ஜிங் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட விவரங்களை பெற்று வரும் நிலையில், பேட்டரியின் தன்மையை அறியும் அம்சம் அறிமுகமானால், ஆண்ட்ராய்டு சாதனத்தின் ரீசேல் வேல்யூ நன்றாக இருக்கும்.
இதன் மூலமாக பயனர்கள் தங்கள் சாதனத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.