செக் குடியரசின் தலைநகர் பிறாகில் துப்பாக்கிச்சூடு : வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!
செக் தலைநகர் பிறாகில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று (22.12) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் வெளிநாட்டினரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்களில் இரு சவுதி அரேபிய பிரஜைகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிதாரியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடம் பொலிசாரால் சீல் வைக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக தலைமையகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி இரங்கல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.