ஹமாஸ்-இஸ்ரேல் பேச்சு தோல்வி? மக்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் உத்தரவு
எகிப்தியத் தலைநகர் கைரோவில் ஹமாஸ் தலைவருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
எனினும் அது பற்றிய அதிகாரத்துவத் தகவல் இல்லை. ஒரு வாரம் சண்டையை நிறுத்துவதாகவும் அதற்குப் பதில் பிணையாளிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டுக்கொண்டதை ஹமாஸ் நிராகரித்துவிட்டதாக Wall Street Journal சொல்கிறது.
2 தரப்புகளும் இடையே வெளியே அறிவிக்கப்படும் நிலைகளில் மிகப்பெரிய முரண்பாடு தெரிகிறது.
பிணையாளிகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் போர் முடிந்தாக வேண்டும் என்கிறது ஹமாஸ்.
ஆனால் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) ஹமாஸ் முடிந்தால்தான் போர் முடியும் என்கிறார்.
ஹமாஸ் வசம் இன்னும் சுமார் 130 பிணையாளிகள் உள்ளனர். அவர்களை மீட்கும்படி அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, காஸாவில் மக்கள் வெளியேற வேண்டும் என்ற புதிய உத்தரவை இஸ்ரேல் பிறப்பித்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சொல்கிறது.
தென் காஸாவில் இருக்கும் கான் யூனிஸ் நகரின் பெரும்பகுதியைவிட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்பது இஸ்ரேலின் புது உத்தரவாகும்.
அங்கு 32 தற்காலிக முகாம்களில் இருக்கும் 140,000க்கும் அதிகமானோர் வெளியேற வேண்டியவர்களின் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் ஏற்கனவே வட காஸாவில் வீடுகளைவிட்டு வெளியேறித் தெற்கில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
தென் காஸாவை இஸ்ரேல் தற்போது தொடர்ந்து தாக்கி வருகிறது.