தீவிரமடையும் இஸ்ரேல் போர்; பிறந்த 17 நாட்களில் பலியான பெண் குழந்தை!
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பிறந்து 17 நாளேயான பெண் குழந்தை ஒன்று, தனக்கான பெயரைச் சூடுவதற்கு முன்னரே போருக்கு பலியாகி இருக்கிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளை வேட்டையாடும் பெயரில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறி, அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை எல்லாம் இஸ்ரேல் தகர்த்து வருகிறது. மின்சாரம், குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டு உயிர் தப்பிய காசா மக்களும் நடை பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களின் மத்தியில் 17 நாட்களுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தை ஒன்று தனக்கான பெயர் சூட்டலுக்கு முன்னரே போருக்கு பலியாகி இருக்கிறது. தெற்கு காசாவின் ரஃபா மீதான இஸ்ரேலின் நேற்றைய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் தகர்க்கப்பட்டது.
அந்த கட்டிடத்திலிருந்த பலரும் பலியானதில், பிறந்து 17 நாளேயான பெயரிடப்படாத சிறுமியும் உடன் பலியானார். ’இளவரசி ஆயிஷா’ என பொருள்படும் ’அல் – அமிரா ஆயிஷா’ என அந்த பெண் குழந்தைக்கு அவளது பெற்றோர் பெயரிட முடிவு செய்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அந்த பெயரற்ற பெண் குழந்தையுடன், 2 வயதாகும் அவளது அண்ணனும் சேர்ந்து பலியாகி இருப்பது உறவினர்களின் துயரத்தை அதிகரித்துள்ளது.
அக்.7, ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலாடியாக இஸ்ரேல் தொடங்கிய காசா மீதான தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.