ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் : நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைப்பு
சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னிக்கு நடைபெறவிருந்த இரண்டு நீதிமன்ற விசாரணைகள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, தலைநகர் மொஸ்கோவில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அந்த சிறையில் நவல்னி இல்லை என்றும் அவருக்கு என்ன நடந்தது என்று யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நபரான 47 வயதான நவல்னி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக நவல்னி குற்றவாளியாக காணப்பட்டார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அவர் சவாலாக இருப்பதும், புடினின் கோபத்துக்கு ஆளாவதுமே அனைத்திற்கும் காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஷ்ய அதிபர் தேர்தல் 2024ல் நடைபெறவுள்ளது. ஆட்சியில் தொடரும் நம்பிக்கையுடன் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக புடின் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக புடின் அதிகாரபூர்வமாக அறிவித்த நாள் முதல் அலெக்ஸி நவல்னியை காணவில்லை.