பசியால் வாடும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆப்கானில் அவல நிலை!
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டமூடாக அவசர உணவு உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் 10 மில்லியன் மக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் கடும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அவசர உணவு உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால், பெண்கள் மட்டுமே கொண்ட 2 மில்லியன் குடும்பங்கள் கடும் நெருக்கடியை எதிகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.மட்டுமின்றி, தலிபான் ஆட்சியின் கீழ் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலையும் இல்லை என்பதால், குடும்பம் முழு பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளதாக 6 பிள்ளைகளின் தாயாரும் விதவையுமான சொஹைலா தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் இரவு நேரம் சாப்பிட ஏதுமின்றி, தூக்கத்திற்கு செல்வதாகவும், அந்த இரவு நேரம் எங்கே பிச்சை எடுப்பது என்றும் அவர் பிள்ளைகளுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.பட்டினியால் துடிக்கும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளித்து தூங்க வைக்கும் அவல நிலையில் இருப்பதாகவும் சொஹைலா குறிப்பிட்டுள்ளார். மயக்க மருந்தால் ஒரு முழு நாள் தூங்கும் பிள்ளையை பயத்துடன் உயிருடன் இருக்கிறதா என்றும் சில வேளைகளில் பரிசோதிக்க நேர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், பட்டினியால் அழும் பிள்ளைகளுக்கு அளிக்கும் மயக்க மருந்தானது அளவுக்கு அதிகமானால் சுவாசக் கோளாறு ஏற்படலாம் என்றே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானில் தற்போது செஞ்சிலுவை சங்கமே சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதுடன் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உணவுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பும் நிதி நெருக்கடியால், மிக விரைவிலேயே தங்கள் சேவையை கைவிட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு முன்னர், முக்கால்வாசி பொதுச் செலவுகளும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து முந்தைய ஆட்சிக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.ஆனால் இந்த நிதியுதவியானது 2021 ஆகஸ்டு முதல் கைவிடப்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.மேலும், உலர்ந்த ரொட்டி மற்றும் குடிநீரால் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் உயிர்வாழ்கின்றனர். சிலர் இந்த குளிர்காலத்தை கடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.