இலங்கை மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடு மீண்டும் இருளில் மூழ்கக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு நாடு முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்ட நிலையில் கருத்து வெளியிடும் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் விநியோக பாதை அமைப்பில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சாரம் கடத்தும் பாதையை புனரமைக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் பரிந்துரைத்திருந்ததாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பது மற்றும் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கும் புதிய முறை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.