சென்னையில் பன்றி திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்: உடலைத்தேடும் மாதவரம் பொலிஸார்!
சென்னை மணலி அருகே பன்றிகளைத் திருடியதாக 17 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலி சின்னமாத்தூர் ஜெயலட்சுமி சாலையைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 17 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மணலி எட்டியப்பன் தெருவில் வசிக்கும் இவர்களது உறவினர்களான 27 வயதான தர்மா, 24 வயதான பாபு ஆகிய சகோதரர்கள் இருவரும் ஆட்டோ டிரைவரான சங்கர் வீட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளனர்.
பின்னர் சஞ்சயிடம் பேச வேண்டும் என்று கூறி அவரையும், அவரது நண்பர் டில்லி ஆகிய இருவரையும் ஆட்டோவில் அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.இதனால் சந்தேகம் அடைந்த தேவி, தனது மகனை அடித்து கடத்திச் சென்றதாக தர்மா, பாபு ஆகிய இருவர் மீதும் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அன்று பிற்பகல் வரை சஞ்சய் வீடு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் பால் பண்ணை காவல் நிலையம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சஞ்சயின் நண்பர் டில்லி மட்டும் வீடு திரும்பி வந்தார். இதையடுத்து அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் சஞ்சய் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக டில்லி அதிர்ச்சிகரமான வாக்குமூலம் தந்தார். சகோதரர்களான தர்மா, பாபு இருவரும் பன்றி மேய்த்து விற்கும் தொழிலை செய்து வந்ததுள்ளனர்.
இந்த சூழலில் இவர்களுடைய பன்றிகளைத் திருடியதாக கூறி சஞ்சய் மற்றும் டில்லி இருவரையும் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். எட்டியப்பன் தெருவில் உள்ள தர்மாவின் வீட்டில் வைத்து சஞ்சையை அடித்து மிரட்டியுள்ளனர். ஆனால், அதற்கு சஞ்சய் அசராமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தர்மா, பாபு ஆகியோர், சஞ்சயை கடப்பாரையால் அடித்துள்ளனர்.அதில் படுகாயம் அடைந்த சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஆட்டோவில் எடுத்துச் சென்று விட்டதாக விசாரணையில் டில்லி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டில்லி சொன்ன தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தர்மா, பாபுவை பிடிக்க எட்டியப்பன் தெருவில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் சகோதரர்கள் இருவரும் தலைமறைவானது தெரிய வந்தது.மேலும் விசாரணையில் சஞ்சய் உடல் கட்டப்பட்ட சாக்கு மூட்டையை மணலி, ஹரி கிருஷ்ணாபுரம் சுடுகாடு அருகே உள்ள மழைநீர் கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. ஆனால், தற்போது வரை கால்வாயில் மழைநீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் சஞ்சயின் உடலை மீட்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலை தொடர்பாக சகோதரர்களான தர்மா, பாபு தலைமறைவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினால்தான் கொலைக்கான காரணம் மற்றும் சஞ்சயின் உடல் எங்கே இருக்கிறது என்பது தொடர்பான தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.