சீனாவின் ரகசிய நிலத்தடி ஆய்வகம்! காத்திருக்கும் ஆபத்து?
சீனாவின் ரகசிய நிலத்தடி ஆய்வகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைத்து வரப்பட்ட நிலையில், தற்போது அதன் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அப்படி இந்த ஆய்வகத்தில் என்னதான் செய்கிறார்கள்? ஏன் நிலத்துக்கு அடியில் ஆய்வகம் அமைக்க வேண்டும்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சீனாவின் பிரபலமான ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தின் மேம்படுத்தல் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்த பணிகளை சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகமும், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான யாலாங் நீர் மின்சாரம் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.
தற்போது அந்த பணிகள் அனைத்தும் முழுமையடைந்ததால் ஆய்வகத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் சீனாவின் நிலப்பரப்புக்குக்கீழ் சுமார் 2.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏன் நிலத்துக்கு அடியில் ஆய்வகம்?
நிலத்துக்கு கீழே ஒரு ஆய்வகம் இருக்கும்போது, பூமியின் மேற்பரப்பில் உள்ள காஸ்மிக் கதிர்களின் பாதிப்புகள் அங்கே இருக்காது. மிகவும் குறைவான அளவான காஸ்மிக் கதிர்களே உள்ளே நுழையும்.
இந்த ஆய்வகத்தில் பேரண்டத்தை அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் ‘டார்க் மேட்டர்’ பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், காஸ்மிக் கதிர்களால் இந்த ஆய்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நிலத்துக்கு அடியில் ஆய்வகம் அமைத்துள்ளனர்.
இந்த ஆய்வகம் இத்தாலியில் உள்ள கிராண்ட் சாஸோ ஆய்வகத்தை விட இரண்டு மடங்கு பெரியது என சொல்லப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வகம் மிகவும் ரகசியமாக செயல்படுவதால், இங்கு வெளி உலகிற்குத் தெரியாமல் வேறு ஏதாவது ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ், சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே வெளியானது என சொல்லப்பட்டு வரும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் இந்த ரகசிய ஆய்வகம் குறித்த தகவல்கள், நமக்கு அச்சத்தையே ஏற்படுத்துகிறது.