வடகொரியாவுக்கு போட்டியாக முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ள தென்கொரியா
வடகொரியாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை தென்கொரியா ஏவியுள்ளது.
தனது எதிரிகளான அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை கண்காணிப்பதற்காக அண்மையில் வடகொரியா தனது ராணுவ உளவு செயற்கைக்கோளினை விண்ணில் ஏவியது. கடந்த வாரம் அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக உரிய சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் அறிவித்தது. மேலும், தென்கொரியாவின் ராணுவ தளவாட மையங்கள், அமெரிக்காவின் பென்டகன், வெள்ளை மாளிகை உள்ளிட்டவற்றை, இந்த உளவு செயற்கைக்கோள் வாயிலாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் ஆராய்ந்து வருவதாகவும் அறிவித்தது.
உளவு செயற்கைக்கோளுக்கான வடகொரியாவின் முந்தைய 2 முயற்சிகள், ராக்கெட் ஏவுதல் மட்டத்திலேயே தோல்விகரமானது. 3வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது உட்பட அதன் செயற்கைக்கோள் நடமாட்டம் மற்றும் எதிரி நாடுகளை கண்காணிப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் எதையும் வடகொரியா வெளியிடவில்லை.
இந்த சூழலில் தென்கொரியா அடுத்தடுத்து 5 உளவு செயற்கைக்கோள்களை ஏவும் முயற்சியில் இறங்கியது. அதன் தொடக்கமாக முதல் உளவு செயற்கைக்கோள் வெள்ளியன்று தென்கொரியா சார்பில் ஏவப்பட்டது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மூலமாக வாண்டென்பெர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
ஸ்பெஸ் எக்ஸ் உடனான ஒப்பந்தத்தின் படி, அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 4 உளவு செயற்கைக்கோள்களை தென்கொரியா ஏவ உள்ளது. தென்கொரியா தனது உளவு தேவைக்காக அமெரிக்காவின் செயற்கைக்கோள் தரவுகளையே இதுவரை நம்பியிருந்தது. வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டதை அடுத்து, உடனடியாக தனது உளவு செயற்கைக்கோளை ஏவ தென்கொரியா முன்வந்தது. இதன் மூலம் அமெரிக்காவை எதிர்பாராது, வடகொரியாவின் ராணுவ நகர்வுகளை தென்கொரியா முன்கூட்டியே உளவறிய முடியும்