ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு
திருகோணமலை -ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக இன்று (23) மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான் பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக இத்தடை உத்தரவினை விதித்துள்ளார்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106 (01) விதிகளின்படி பொது சுகாதாரம் மற்றும் பொது வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளார்.
மேலும் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளத்தில் புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மயானத்திலோ அல்லது பொதுமக்கள் சட்ட ரீதியாக பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு மயானத்திலோ விடுதலைப்புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூறும் நோக்கத்திற்காக மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தமது காவல்துறை அதிகார வரம்பிற்குள் குறித்த நிகழ்வினை நடாத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவு கூற வேண்டாம் என சம்பூர் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சமூக ஆர்வலர் ரமேஷ் நிக்கலஸ் உட்பட 17 பேருக்கு எதிராக மூதூர் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு வழங்கியுள்ளது.