அறுந்து கிடந்த மின்கம்பி… கணவன் கண்முன்னே தாய், குழந்தைக்கு நேர்ந்த கதி!
																																		அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் குழந்தை உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா (23), அவரது 9 மாதக் குழந்தை மற்றும் கணவன் ஆகிய மூவரும் இன்று காலை கர்நாடகா மாநிலம், பெங்களூரு சென்றனர். அவர்கள் பேருந்து மூலம் சென்னையில் இருந்து குடும்பத்துடன் பெங்களூரு சென்றதாக தெரிகிறது.
பேருந்தில் இருந்து இறங்கி ஹோபார்ம் பகுதியில் நடந்து சென்ற போது, குழந்தையை சவுந்தர்யா கையில் வைத்திருந்தார். அவர்கள் சாலையைக் கடக்க முயன்ற போது, கீழே அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை சவுந்தர்யா மிதித்துள்ளார்.
இதில், சவுந்தர்யாவும், 9 மாதக் குழந்தையும் உடல் கருகி உயிரிழந்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பெண்ணின் கணவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
        



                        
                            
