இந்தியாவுக்கு எதிராக வலுக்கும் ஆபத்துக்கள்! அரபிக்கடலில் சீனா, பாகிஸ்தான் கப்பல் படைகள் கூட்டுப்பயிற்சி
சீனா மற்றும் பாகிஸ்தான் கப்பல் படைகள் இடையே ஒரு வாரம் நடைபெறும் கூட்டுப்பயிற்சிகள் அரபிக் கடலில் இன்று துவங்கியுள்ளது.
சர்வதேச அளவில் எல்லை பிரச்சினைகள் காரணமாக இந்தியாவிற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து இந்திய ராணுவம் தடுத்து வருகிறது.இதேபோல் சீன ராணுவம் அருணாச்சல் பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்டு வரும் ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யா மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே அந்தமான் கடல் பகுதியில் கப்பல் படை கூட்டுப்பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டுப்பயிற்சியின் போது நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களை கொண்டு இரு நாடுகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கப்பல் படை கூட்டுப்பயிற்சி அரபிக்கடல் பகுதியில் இன்று துவங்கி உள்ளது. இந்த கூட்டு பயிற்சியின் போது நீர் மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு கப்பல்களுடன் தீவிர பயிற்சியில் இரு நாட்டு கப்பல் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே இலங்கையில் சீன அரசு தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கு அது ஆபத்தாக முடியலாம் என அமெரிக்காவும், ரஷ்யாவும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவின் கப்பல் படைக்கு சவால் விடும் வகையிலான பயிற்சிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்டு இருப்பதாக கருத்து நிலவி வருகிறது.