கடைசி 2 வாய்ப்பு – அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்..?
நடப்பு உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது அரையிறுதிக்கு செல்ல 3 அணிகள் போட்டி போட்டு வருகிறது.
வரும் 15-ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்குள் 4-வது அணியாக நுழைய முடியும். அரையிறுதிக்கு நான்கு இடங்கள் உள்ளன. அதில் மூன்று இடங்கள் நிரப்பப்பட்டு ஒரு இடம் காலியாக உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை தற்போது அரையிறுதிக்கு சென்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் எந்த அணி தனது கடைசி லீக் போட்டியில் வென்று நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்குள் 4-வது அணியாக நுழையும் என்று கூறப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அணி தனது போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா..? என்றால் முடியாது.. வெற்றி பெற்றால் அது முடியும் எப்படி முடியும் என்பதை பார்ப்போம். நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. அதே சமயம் நியூசிலாந்தின் வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. தற்போது நியூசிலாந்து 9 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், அணியின் நிகர ரன் ரேட் பாகிஸ்தானை விட சிறப்பாக உள்ளது.
பாகிஸ்தான் 8 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானின் நிகர ரன் விகிதம் +0.036 ஆக உள்ளது. அதேசமயம் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் +0743ஆக உள்ளது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டதா..? என்றால் இல்லை.
ரன் ரேட்டில் பாகிஸ்தான் எப்படி நியூசிலாந்தை பின்தள்ள முடியும்?
பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். அப்போது பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் நியூசிலாந்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணியால் இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முடியுமா.? என்பது கேள்வி குறியாக உள்ளது.
இதைத் தவிர, பாகிஸ்தான் அணிக்கு வேற ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால் ரன்களை சேஸிங் செய்ய வேண்டும். அப்படி ரன் சேஸிங் செய்தால் எத்தனை ஓவரில் பாகிஸ்தான் இலக்கை எட்ட வேண்டும் என்றால் வெறும் 2.3 ஓவர்களில் அதாவது 15 பந்துகளில் இங்கிலாந்து அணி அடித்த ரன்களை அடித்து இலக்கை அடைய வேண்டும். பாகிஸ்தான் அணி 15 பந்துகளில் இலக்கை எட்டினால் நிகர ரன் விகிதம் நியூசிலாந்தை விட சிறப்பாக இருக்கும்.
இதன் மூலம், தேவையான நிகர ரன் ரேட்டுடன் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் பின்னர் பேட்டிங் செய்தால் 15 பந்துகளில் இலக்கை எட்ட வேண்டும். இதை இங்கிலாந்து போட்டியின் போது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வது உறுதியாகும்.