வேலை – தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் அறிந்திருக்க வேண்டியவை!
வேலை, தனிப்பட்ட வாழ்க்கை – இரண்டையும் சரிவரச் சமாளிப்பது கடினம் என்பது பலரின் கருத்து. ஒரு சில வேளைகளில் அளவுக்குமீறி வேலைபார்ப்பதால் சிலருக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இரண்டையும் சமாளிப்பது எப்படி? சில வழிகள் உள்ளன என்கிறது Forbes சஞ்சிகை…
பிழையின்றி மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கைவிடுங்கள்
வேலையிலும் குடும்பத்திலும் நிறையப் பொறுப்புகள் வரும்போது அவற்றை முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயன்று முடிப்பதே நல்லது என்று நிர்வாகப் பயிற்றுவிப்பாளர் முனைவர் மெரிலின் புடெர்-யோர்க் (Marilyn Puder-York) சொல்கிறார்.
பிழையே இல்லாமல், குறையே இல்லாமல் வேலைகளை முடிப்பது மிகவும் கடினமானது. அதனால் பிழையின்றி, குறையேயின்றி இருப்பதை எதிர்பார்ப்பது நல்லதல்ல என்கிறார் அவர்.
வேலை முடிந்தவுடன் வேலை தொடர்பானவற்றை மூடிவையுங்கள்
தகவல் தொடர்பின் உதவியுடன் எந்நேரமும் ஒருவருடன் தொடர்பு கொண்டிருப்பது சாத்தியமாகிறது. வேலை நேரத்தில் அது நன்மை வழங்குகிறது.
ஆனால் வேலை முடிந்தவுடன், ஓய்வு நேரங்களில் கைத்தொலைபேசியில் வேலையிடம் தொடர்பான அனைத்தையும் அடைத்துவிடுவதே சிறப்பு என்கிறார் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளிப் பேராசிரியர் ராபர்ட் புரூக்ஸ் (Robert Brooks).
அவ்வாறு இருப்பதனால் வேலையிடததில் இருப்பவர்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் உங்களுடன் தொடர்புகொள்ள முடியாது.
உங்கள் வாழ்க்கையில் எது முக்கியம்?
முதலில் வாழ்க்கையில் எவற்றுக்கு முதன்மை அளிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். அடுத்து, அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கான வரையறைகளை அமைத்து வையுங்கள்.
அதைப் பின்பற்றி நேரத்தைச் சரியான அளவில் வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் செலவழிக்கலாம்.
உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவர்களுடனும் நிம்மதி தரும் நடவடிக்கைளிலும் அதிக நேரத்தைச் செலவழிப்பது சிறப்பாகும்.