கொழும்பில் நடுத்தர மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் : வெளியான அறிவிப்பு!
சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்காக கொழும்பு நகரில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (26.10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் 2024ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்துடன் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான மக்களுக்காக கொழும்பில் 05 வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு 350 மில்லியன் டொலர்கள் செலவாகும்.
சீன அரசாங்கம் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மானியமாக வழங்க இணங்கியுள்ளது. அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை கிடைத்துள்ளது. இது 2500 வீடுகளுக்கான திட்டமாக அமையும் எனக் கூறப்படுகிறது.