ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் சிறப்பு நிவாரணம் வழங்க முடியாது
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்க முடியாது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
குறித்த ரிட் மனு நீதியரசர்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு அங்கத்தவர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம ஆஜரானார்.
பௌத்தம் உட்பட ஏனைய மதங்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்குவதற்கு தகுதியற்றவர் என அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அப்போது மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய எல்லே குணவம்ச தேரர் மற்றும் சமய சார்பற்ற தலைவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை வந்தவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படாவிடினும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படுவார் எனில் தனது வாடிக்கையாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தமது தரப்பினர் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கூட நீதிமன்றம் தகுதியற்றது என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழும் மனுதாரருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.