லியோ திரைப்பட ரிலீஸை தடைவிதிக்க கோரி களத்தில் இறங்கிய தில் ராஜு
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க கோரி தில் ராஜு களத்தில் இறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் கடந்தாண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார்.
தயாரிப்பாளர் தில் ராஜு, படங்களை தயாரிப்பது மட்டுமின்றி அதனை விநியோகமும் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் போல் ஆந்திராவில் தில் ராஜு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். அங்கு இவரது கண்ட்ரோலில் எக்கச்சக்கமான தியேட்டர்கள் உள்ளன. அதனால் இவரை பகைத்துக் கொண்டால் படம் ரிலீஸ் ஆவது மிகவும் கஷ்டம் என்கிற சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக தில் ராஜு களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தமிழ்நாட்டில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது. அதில் இருவருக்கு ஏதோ கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது.
அது தற்போது லியோ பட ரிலீஸ் சமயத்தில் பூதாகரமாக வெடித்துள்ளதால், அப்படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்ய முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம் தில் ராஜு.
நடிகர் விஜய்க்கு ஆந்திராவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளாமே உள்ளது. இந்த பிரச்சனையால் அப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அது படத்தின் வசூலை பெரியளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், அதற்குள் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆந்திராவில் இப்படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.