மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை -இளைஞரின உயிர் காப்பாற்றப்பட்டது.
‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து இச் சத்திர சிகிச்சையை முன்னெடுத்தனர்.
நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த நெஞ்சுக்கூட்டை திறந்து சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் உயிர் இவ்வாறு காப்பாற்றப்பட்டது.
கடந்த 5 ஆம் திகதி வியாழன் இரவு 8.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 35 வயது இளைஞர் ஒருவர் வலது பக்க நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார்.