இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் குறித்து ஆழ்ந்த கரிசணையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
“1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளின் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்க இலங்கை உறுதியாக உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அன்புக்குரியவர்களை இழந்து வாழும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.
டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், வன்முறையின் போது இதுவரை ஒரு இலங்கையர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.