இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசு பேருந்துகள் சேவையில் இருந்து நீக்கம்
2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசு பஸ்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் பாவனைக்காக 89 சொகுசு பஸ்களை அரசாங்கம் இறக்குமதி செய்திருந்ததுடன் அதன் பின்னர் தெற்கு அதிவேக வீதியின் பொது போக்குவரத்திற்காக பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.
49 பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், அரசுக்கு 80,000 – 90,000 ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உதிரி பாகங்களை பழுதுபார்ப்பதற்காக கொண்டு வர முடியாத காரணத்தினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த உதிரி பாகங்களை சீனாவின் ஃபோட்டோன் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பஸ்களை பழுதுபார்ப்பதற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.