திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்: தி.சரவணபவன்
தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நடாத்தினார்கள்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,சிவில் சமூக செயற்பாட்டாளர் லவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தியாகதீபன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு அருட்தந்தை ஜோசப்மேரி அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தியாகதீபன் திலீபனின் தியாகம் குறித்த சிறப்புகள் குறித்தான உரிமைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.