ஆப்பிள் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை
இந்திய கணினி அவசரகால பதில் குழுவான CERT-In, ஆப்பிள் பயனர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்படும் சபாரி வெப் பிரவுசரில் பல்வேறு கோளாறுகள் இருப்பதை CERT-In கண்டறிந்ததாக தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோளாறானது ஐபேடு, ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் இருக்கலாம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய கோளாறால் அந்த சாதனங்களை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து, அதன் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி தகவல்களை திருட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது CERT-In அமைப்பு.
இந்த பாதுகாப்பு கோளாறு, ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஓஎஸ் பயன்படுத்தும் சாதனங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிள் IOS 16.7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஐபோன்கள் மற்றும் ஐபேடுகள். மேக் ஓஎஸ் 12.7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஆப்பிள் மேக் சாதனங்கள். மேலும் வாட்ச் ஓஎஸ் 9.6.3 மற்றும் அதற்கு முந்தைய ஓஎஸ் கொண்ட ஆப்பிள் வாட்சுகள். பழைய ஆப்பிள் சபாரி பிரவுசரில் இந்தப் பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கூறிய இயங்குதளங்களில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் மிகத் தீவிரமான பாதுகாப்பு கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என அந்த அமைப்பு கூறியுள்ளது. எனவே அனைத்து ஆப்பிள் பயனர்களும் தங்கள் சாதனத்தை சமீபத்திய ஒஎஸ்-க்கு உடனடியாக அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பால் ஆப்பிள் பயனர்கள் அச்சத்தில் உள்ளனர். உலகிலேயே பாதுகாப்பான ஸ்மார்ட்போன் என தங்களை கூறிக்கொள்ளும் ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போனிலேயே இத்தகைய பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென்பது, மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் மார்க்கெட் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.