திலீபனின் நினைவேந்தல் பவனி : இன முரண்பாட்டை தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு!
திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி ஊடாக இன முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20.09) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், திலீபனின் நினைவேந்தல் தற்போது அனுஸ்டிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபன் இருந்தாலும் அவர் அஹிம்சை வழியில் போராடி இறுதியில் உயிர் தியாகம் செய்தவர்.
அவருடைய உருவப்படத்தை சுமந்த வண்ணம் ஊர்தி பவனி மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் போது தம்பலகாமம் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிங்களவர்கள் தம்பலகாமம் பகுதியில் வாழ்கிறார்கள்.
சிங்களவர்கள் அதிகளவில் வாழும் பகுதிக்கு செல்லாமல் இந்த ஊர்தி பேரணி திருகோணமலைக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செல்லாமல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சிங்களவர்களின் கோபத்தை தூண்டி விடும் வகையில் இந்த பவனி சென்றுள்ளது.
இதனால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. திலீபனின் நினைவேந்தல் பவனி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.