நிப்பா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் தீவிர முயற்சியில் கேரளா
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிப்பா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பலரின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொண்டுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 10 பேருக்குச் சிகிச்சை அளிக்க மட்டுமே மருந்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது நால்வர் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிப்பா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1,000 பேருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். வௌவால் அல்லது பன்றி அல்லது மனிதர்கள் வழி நிப்பா வைரஸ் பரவக்கூடும்.
அதற்குத் தடுப்புமருந்து இல்லை. சிகிச்சையில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திப் புரதங்களைப் போல் செயல்படும், செயற்கைப் புரதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை Monoclonal antibodies என்று அழைக்கப்படுகின்றன.