குழந்தைகள், பெண்கள் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க திட்டம்
சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகக் கூறியுள்ள இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் அனுபா பாஸ்குவல் ஆகியோர் தலைமையில் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
குழந்தைகளை பிச்சை எடுக்க அமர்த்துவதும், சில குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து பிச்சை எடுக்க வைப்து, பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் வாடிக்கையாக உள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்து பிச்சை எடுப்பது வியாபாரமாக மாறியிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும், நடைமுறை மட்டத்தில் முறையான அமுலாக்கத்தின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள பிச்சைக்காரர்கள் தொடர்பான கணக்கெடுப்பின் ஊடாக இந்நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் தொடர்பில் உரிய தரவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.