ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்மிகள்!
எகிப்து நாட்டில் மத்திய நைல் டெல்டா பகுதியில் உள்ள அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா கோவிலில் மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட பதினாறு மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மம்மிகளின் மண்டை ஓட்டில் தங்க நாக்குகள் பொருத்தபட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் இதனை பகிர்ந்ததன் மூலம், இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் பேசுவதற்கு உதவும் வழியாக இந்த தங்க நாக்குகள் பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க நாக்குகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தியர்களால் நடத்தப்படும் சடங்கு முறை என்று நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல், இவை இறந்தவர்கள் பாதாள உலகின் தலைவன் ஓசைரிஸூடன் தொடர்பு கொள்ள உதவி செய்வதாக நம்பி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் கழுத்தை சுற்றி பாம்புகள், கீரீடங்கள் மற்றும் கொம்புகளும், மார்பில் பால்கன் தலையை குறிக்கும் நெக்லஸ் உள்ளிட்டவையும் இருந்தன. கோவிலில் நடத்தப்பட்ட முந்தைய அகழ்வாராய்ச்சியில் ராணி கிளியோபாட்ரா VII பெயர் மற்றும் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.