பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி
ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரக்ஞானந்தா தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் அழைப்பின் பேரில், அவரது இல்லத்திற்கு குடும்பத்தாரோடு சென்ற பிரக்ஞானந்தா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரக்ஞானந்தாவை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இன்று இரவு 7 மணிக்கு மிகவும் விசேஷமான விருந்தனர்களை சந்தித்தேன். உன்னையும், உனது குடும்பத்தாரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். உங்கள் உதாரணம் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உன்னை நினைத்து பெருமை அடைகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.