பொலிஸ் காவலில் வீட்டுப் பணிப்பெண் மரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட வெலிக்கடைப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தமக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது முதலாளியும் பிரபல தயாரிப்பாளருமான சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். அவர் தாக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
வீட்டுப் பணிப்பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதி உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.